Pages

Sunday, 10 June 2012

மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் மத்திய அரசு ஒப்புதல்


புதுடில்லி:நாட்டில், முதல் முறையாக, மும்பை - ஆமதாபாத் இடையே, மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லும், புல்லட் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின், இந்த சேவை, புனே நகர் வரை நீட்டிக்கப்படும்.பயண நேரத்தை வெகுவாக குறைக்க வசதியாக, முக்கிய நகரங்களுக்கு இடையே, அதிவேக ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.இதற்காக, ஜப்பான் நாட்டின் உதவியோடு, மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்களை, நாட்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்தது.

திட்டத்திற்கு அனுமதி:இதையடுத்து, சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், மும்பை - ஆமதாபாத் இடையேயான, 492 கி.மீ., தூரத்திற்கு, புல்லட் ரயில்களை இயக்குவதற்கான அதிவேக ரயில் பாதை அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் மூலம், நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரயில், மும்பை-ஆமதாபாத் இடையே, விரைவில் இயக்கப்பட உள்ளது. 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.திட்டத்தை, தனியார் மற்றும் பொதுத் துறை இணைந்து நிறைவேற்றுவதா அல்லது மற்றொரு நாட்டு அரசுடன் இணைந்து நிறைவேற்றுவது என்பது, பரிசீலனையில் உள்ளது. இதுதொடர்பாக, விரைவில் முடிவு எடுக்கப்படும்.

இரண்டரை மணி நேரம்:தற்போது, மும்பை - ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே, எங்கும் நிற்காமல் செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால், ஏழு மணி நேரத்தில் செல்லலாம்.புல்லட் ரயில் அறிமுகமானால், இரண்டரை மணி நேரத்தில் செல்லலாம். ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள், அதிவேக ரயில் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில், ஏழு மார்க்கங்களில், அதிவேக புல்லட் ரயில்களை இயக்க, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை- பெங்களூரு, சென்னை-கோவை-திருவனந்தபுரம், சென்னை-விஜயவாடா- டோரனக்கல்-ஐதராபாத், டில்லி-சண்டிகர்-அமிர்தசரஸ்,புனே-மும்பை-ஆமதாபாத், ஹவுரா-ஹால்தியா,டில்லி-ஆக்ரா- லக்னோ-அலகாபாத்- பாட்னா ஆகிய ஏழு அதிவேக ரயில் பாதை திட்டங்கள் முக்கியமானவை.இது தவிர, இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட் டில், டில்லி-ஜெய்ப்பூர்-அஜ்மீர்-ஜோத்பூர் இடையேயும், அதிவேக புல்லட் ரயில் இயக்க, முடிவு செய்யப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads