முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் திங்கட்கிழமையான இன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடிகளுடன் பழனி மலையில் குவிந்துள்ளனர்.
தீர்த்த யாத்திரைக்கு பிரசித்தி பெற்றதும், நாட்டுப்புற திருவிழா என்றும் அழைக்கப் பெறும் பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 23-ந் தேதி திருஆவினன் குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி உத்திர நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி தீர்த்த வாரிக்கு எழுந்தருளலும், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதலும், காலை 9 மணிக்கு தந்தப் பல்லக்கில் திருஆவினன்குடி எழுந்தருளலும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டமும் கிரி வீதிகளில் நடைபெறும். இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனி வந்த வண்ணம் உள்ளனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் தற்போதே பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அவர்கள் எழுப்பும் அரோகரா கோஷம் விண்ணை எட்டுகிறது. பழனியில் பங்குனி உத்திர விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன. பழனி மலையில் எங்கும் மக்கள் கூட்டமாகக் காணப்படுகிறது

No comments:
Post a Comment