Pages

Thursday, 5 April 2012

தமிழக செய்திகள்

                     கோயம்பேட்டில் நிதி நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டி இரண்டரை கிலோ தங்க காசுகளை கொள்ளையடித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கெங்குவார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(29).கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். இந்த நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் விற்பனை பிரதிநிதியாக அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் (46) உள்ளார்.
                     இவர்கள நிறுவனத்தில் அதிக பணம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக தங்கக் காசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான தங்க காசுகள் வாங்க சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செந்தில்குமாரும், ராமநாதனும் நேற்று முன்தினம் வந்தனர். இருவரும் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். நேற்று சூளைமேட்டில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்று 7½ கிலோ தங்கக் காசுகளை வாங்கிக் கொண்டு லாட்ஜுக்கு திரும்பினர். தங்க காசுகளை 2½ கிலோ வீதம் பிரித்து 3 பைகளில் போட்டனர். அந்த பைகளுடன் இரவு 9 மணி அளவில் ஆட்டோவில் எழும்பூரில் இருந்து கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்துக்கு சென்றனர்.
                    அமைந்தகரை பகுதியில் சென்றபோது 35 வயது மதிக்கதக்க ஒருவர், திடீரென ஆட்டோவை மடக்கி டிரைவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவரை தனது மைத்துனர் என டிரைவர் கூறியுள்ளார். கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்றதும், “வழக்கமாக செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். மெட்டுக்குளம் செக்போஸ்ட் சென்று எப் அன்ட் ஜி சாலை வழியாக சீக்கிரமாக அழைத்து செல்கிறேன்” என செந்தில்குமாரிடம் ஆட்டோ டிரைவர் கூறினார். அதை நம்பிய அவர்கள், ‘சரி, போங்கள்’ என்றனர்.
எப் அன்ட் ஜி சாலையில் திடீரென ஆட்டோவை டிரைவர் ஓரமாக நிறுத்தினார். அப்போது செந்தில்குமார், “ஏன் ஆட்டோவை நிறுத்துகிறீர்கள். சீக்கிரம் போங்கள்.. பஸ் போய் விடும்” என்றார். உடனே டிரைவர் கத்தியை எடுத்து செந்தில்குமாரை மிரட்டினார். பயந்துபோன இருவரும் ‘திருடன்.. திருடன்’ என்று சத்தம் போட்டனர். டிரைவரின் மச்சான், உடனே ராமநாதன் வாயை பொத்தினார். டிரைவரோ கத்தியால் செந்தில்குமாரின் இடது கையில் வெட்டினார். வலியால் அவர் அலறித் துடித்தார்.
              பின்னர் ஆட்டோ டிரைவரும் அவரது மச்சானும் 2 பேரையும் கீழே தள்ளிவிட்டு அவர்களிடம் இருந்த ஒரு பையை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பிவிட்டனர். அதில் 2½ கிலோ தங்கக் காசுகள் இருந்தன. காயமடைந்த செந்தில்குமாரை ராமநாதன் மீட்டு கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதுபற்றி கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தனர்.
             இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் விஜயகுமார் (பொறுப்பு), உதவி கமிஷனர் கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்துக்கு செந்தில்குமார், ராமநாதனை அழைத்துச் சென்று கொள்ளை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டறிந்தனர். அவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads