சொக்கலிங்கத்திற்கு, அப்பா தன்னை சொக்கு…சொக்கு.
. என்று அழைத்ததை விட மக்கு… மக்கு.. என்று அழைத்ததுதான் அதிகம் என்பதில் வருத்தமுண்டு. சொக்கு படிப்பில் சூரப் புலி அல்ல. பெரும்பாலான நேரங்களில் அனைத்துப் பாடங்களிலும் பாஸ் பண்ணுவான். சில நேரங்களில் ஓரிரு பாடங்களில் பெயிலாகி விடுவதும் உண்டு.
பல நேரங்களில் சொக்கு பெயிலான போதெல்லாம், பள்ளியில் அப்பாவைக் கூப்பிட்டு வா என்பதும், ராஜலிங்கம் போய் ஆசிரியர் பேசுகிற ஏச்சு பேச்சுக்களை வாங்குவதும் வழக்கம். பெரும்பாலான நேரங்களில், பையன் படிப்பு சரி இல்லன்னா அடுத்தமுறை டி.சி.யை கொடுத்து விடுவோம்
என்று பள்ளி மிரட்டுவதும், மகனுக்கு,
தான் அறிவுருத்துவதாகவும் பலமுறை மன்றாடியுள்ளார்.
ஆகையால் ராஜலிங்கத்திற்கு, சொக்குவைக் கண்டாலே ஆகவில்லை.
டேய்.. உன்னால என்னோட மானம்தான் போகுது என்பார்.
அன்றும் சொக்கு தந்தையிடம், அப்பா உங்களைப் பள்ளிக்கு வர சொல்லி இருக்காங்க என்றான். ராஜலிங்கத்திற்கு பயங்கர கோபம். இந்தத் தடவை நானே உன்னை அந்த பள்ளியிலிருந்து மாற்றப் போகிறேன் என்று திட்டினார். பெத்த கடனுக்கு நாளை பள்ளிக்கு வருவதாகவும், நீ வேற எதுவும் இனி சொல்ல வேண்டாம் என்றார்.
அன்று பள்ளியின் ஆண்டு விழா நாள் என்பதால் தலைமை ஆசிரியர் ரொம்ப பிஸியாக இருந்தார். எல்லா மாணவர்களும் பெற்றோர்களும் குழுமி இருந்தனர். ராஜலிங்கத்திற்கு பள்ளி ஆண்டு விழாவில் பங்கெடுக்கத்தான் கூப்பிட்டு இருப்பார்கள் என்று சமாதானப்படுத்திக் கொண்டார். பள்ளியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிக்கத் துவங்கினார்கள். ராஜலிங்கம் உள்ளிட்ட படிப்பில் பின் தங்கிய பிள்ளைகளைப் பெற்ற அத்தனைப் பெற்றோர் முகத்திலும் ஏக்கம்.
இறுதியில் தலைமை ஆசிரியர் நம் பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக சொக்கலிங்கம் என்ற மாணவன் தமிழக அரசின் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறான் என்று அறிவித்தார். அதுவும் நம் பள்ளியில் உள்ள எனக்கோ, மற்ற ஆசிரியர்களுக்கோ தெரியாமலேயே, அவன் கடந்த ஆண்டில் மூன்று முறை ரத்ததானம் செய்திருக்கிறான் என்றும், விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிர் காப்பாற்றி உள்ளான். தான் படித்த பள்ளியின் பெயரைச் சொல்லி நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறான். அப்படிப்பட்ட மகனைப் பெற்ற, நன்கு வளர்த்த சொக்கலிங்கத்தின் தந்தை ராஜலிங்கத்தையும் மேடைக்கு வரும்படி அழைத்தார்.
மதிப்பெண் பெறுவது மட்டுமே, சிறந்த மகனுக்கு அழகு என்று நினைத்த அத்தனை பெற்றோருக்கும் ஒரு நிமிடம் சொக்கலிங்கத்தின் செயல் உணரச் செய்தது. உறைக்கவும் செய்தது. ராஜலிங்கத்திற்கும் கூட.
வீட்டிற்கு இருவரும் வந்தார்கள். ராஜலிங்கம் மகனைக் கட்டி அணைத்தார். என்னை மன்னிச்சுடுடா .. நீ மக்கு இல்லடா… சொக்கலிங்கம் மட்டுமல்ல சொக்கத்தங்கமும் கூட… என்றவரின் கண்கள் குளமாகி இருந்தன.
No comments:
Post a Comment